×

சென்னை செய்தி துளிகள்....

* போக்சோவில் பெயின்டர் கைது
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பெயின்டர் நித்தியராஜ் (எ) சரவணன் (35), நேற்று முன்தினம் நெற்குன்றம் சக்தி நகரில் பெயின்டிங் வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நித்யராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

* 22 கிலோ கஞ்சா பறிமுதல்
வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பல்லாவரம் பகுதிகளில் விற்ற திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அக்தர் உசேன் (26), ஜபர் அலி (24) ஆகியோரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* கால்வாயில் விழுந்தவர் பலி
திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சங்கரன் (74). ஓய்வுபெற்ற மாநகர பேருந்து டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு எண்ணூர் ஜோதி நகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மதில் சுவரில் அமர்ந்தபடி, தனது நண்பர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சங்கரன் கால்வாய்க்குள் தவறி விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

* பணம் பறித்த திருநங்கை கைது
மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் பயஸ் அகர்வால் (18), சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் இவர் கடைக்கு சென்று,  வீடு திரும்பியபோது, இவரை வறிமறித்து 6500 ரூபாயை பறித்து சென்ற வியாசர்பாடியை சேர்ந்த திருநங்கை அப்பு (எ) அஸ்வினியை (22) போலீசார் கைது செய்தனர்.

* 2 கோயில்களில் கொள்ளை
சேலையூர் பகுதியில் உள்ள பிடாரி பொன்னியம்மன் மற்றும் வீரபத்திரர் கோயில்களை திறக்க நேற்று காலை நிர்வாகிகள் வந்தபோது, கோயில்களின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

* கத்தியுடன் திரிந்த ரவுடி கைது
புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோ (30), நேற்று அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டா கத்தியை வைத்துக் கொண்டு அங்கு வருபவர்களை அச்சுறுத்தி வருவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று மனோவை சுற்றி வளைத்து பிடித்து, பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

* வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜமீர் அகமது (27). இவர், ரூ.1 லட்சத்தை தனது வீட்டின் பீரோவில் வைத்துவிட்டு, உறங்க  சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் 4 செல்போன்கள் மாயமானது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீ குரோம்பேட்டை ஐஸ்வர்யா நகரை சேர்ந்த பூமிநாதன் (38) வீட்டின் பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.

* வழிப்பறி ஆசாமிகள் கைது
ஓட்டேரி பகுதியை சேர்ந்த அப்துல் நாசர், நேற்று ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு அருகே நடந்து சென்றபோது, இவரை வழிமறித்த 3 பேர், கத்தி முனையில் அவரது செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார், செல்போன் சிக்னலை வைத்து 3 பேரையும் ஓட்டேரி கே.பி.பார்க் அருகே வைத்து, ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணையில், பட்டாளம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24), அசோக் (27), இமானுவேல் (21) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

* இளம்பெண் தீக்குளித்து சாவு
திருவிக நகர் காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்த தயாளன் மனைவி நித்தியா (24).தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நித்தியா, அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். ஆனாலும், வலி அதிகமானதால், கடந்த 8ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

* குடும்பத்தினர் மீது தாக்குதல்
நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மனைவி மாலா (24), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (20), இவரை கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த ராஜசேகர், லாரன்ஸை கண்டித்து, கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ், நண்பர்கள் 6 பேருடன் வந்து, ராஜசேகர், அவரது மனைவி மாலா, தாய் விஜயா, உறவினர் கீர்த்தி ஆகியோரை உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு தப்பினார். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய 6 பேரை தேடி வருகின்றனர்.

* வாலிபரை தாக்கிய மூவர் கைது
அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (20), கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கியபோது, அருகே உள்ள கோயில் வாசலில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (21), அவரது தம்பி விக்னேஷ்குமார் (20), மகாத்மா நகரை சேர்ந்த டிரைவர் பிரசாந்த் (21) ஆகிய 3 பேர் சத்தமாக பேசியுள்ளனர். இதனால், தூக்கம் கலைந்ததால் அங்கு சென்ற மணிகண்டன், 3 பேரையும் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் மணிகண்டனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார், அவர்கள் 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேற்கண்ட மூவர் அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai news ,
× RELATED சென்னை செய்தி துளிகள்