×

வீடுவீடாக வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு வேளச்சேரி வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு: நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது

சென்னை: வேளச்சேரி வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, வாக்கு பதிவுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங்க் ரூமில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வேளச்சேரி தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியிலிருந்து இருசக்கர வாகனத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “வேளச்சேரி தொகுதியின் 92ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு வரும் 17ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். மறு வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்திட தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்தப் பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் வாக்காளர்களின்  இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வேளச்சேரி தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அதிமுக சார்பில் எம்.கே.அசோக், அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் மோ.கீர்த்தனா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது. எனவே இங்கு வாக்களிக்க தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் இந்த மறு தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
 
பிரசாரம் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் அந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதையடுத்து, அங்கு பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.   காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் அவருக்கு ஆதரவாக திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். அதேபோன்று அதிமுக உள்ளிட்ட வேட்பாளர்களும் வாக்கு கேட்டனர்.  நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

Tags : House ,Velachery Polling Station ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்