×

நீர்நிலையில் கட்டப்பட்டிருக்குமானால் செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் இடிக்கப்படும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதை இடிக்க உத்தரவிடுவோம் என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக  காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள இடம்  தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும். இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல்நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நீர் ஆதாரமாக விளங்கும் இடத்தில் காவல்நிலையத்தை கட்டியுள்ளனர். எனவே, இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் அதை இடிக்க உத்தரவிடுவோம். புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. கூடுதலாக எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் 2 பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்க உரிய பெயர்களை பரிந்துரைக்குமாறு ஐஐடி இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். நீர்நிலையில் கட்டப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதை மீட்க கட்டிடத்தை இடிப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Chemmancheri police station ,High Court ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...