தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு குளிர்சாதன வசதி பஸ்கள் நிறுத்தப்படுமா தடுப்பு நடவடிக்கைகளில் பயணிகளிடம் ஒத்துழைப்பு இல்லை

நெல்லை, ஏப். 16: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமடைவதை தொடர்ந்து அரசு குளிர்சாதன வசதி பஸ்கள் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் தடுப்பு நடவடிக்கை பின்பற்றினாலும் பயணிகள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. பின்னர் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை ெதாடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்க அரசு பல்வேறு கட்டமாக தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் பொது இடங்களில் பயணிக்கும் போது முகக் கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் பொருளாதார சிக்கன குளிர்சாதன வசதி உள்ள 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வழக்கமாக பயணிக்கும் வழித்தட பஸ்களில் உள்ள கட்டணத்தை காட்டிலும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கோடை வெயில் ெகாளுத்துவதால் பொதுமக்கள் குளிர்சாதன வசதி பஸ்களில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரத்தில் அரசின் கொரோனா வழிகாட்டுதல்களான டிரைவர்கள், கண்டக்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். 2ம் கட்ட தடுப்பு ஊசியும் எடுக்க உள்ளனர்.

அனைத்து பஸ்களும் காலை மற்றும் இரவில் பணிமனைக்கு திரும்பும் போது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பணிக்கு வரும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்குபின் பணி வழங்கப்படுகிறது. இதேபோல பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் மட்டும் பயணிக்க வேண்டும். இவைகளை மீறி பஸ்களில் பயணிக்க வருபவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் இருந்தும் பல இடங்களில் பயணிகள் பஸ்களில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பயன்படுத்தாமலும், நின்று கொண்டும் பயணித்து வருகின்றனர். நெல்லை போக்குவரத்து கழகத்தில் நெல்லையில் இருந்து தென்காசிக்கு 3, பாபநாசம் 2, மதுரை 2, தூத்துக்குடி 3, திருச்செந்தூர், சங்கரன்கோவில் உள்பட 12 குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வாட்டி வதைக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து சமாளிக்க குளிர்சாதன வசதி பஸ்களில் பயணிகள் அதிகளவு பயணிக்கின்றனர். குளிர்சாதன வசதி உடைய இடங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழகம் வருமானத்தை குறிக்கோளாகக் கொண்டு குளிர்சாதன வசதி பஸ்களை இயக்குகிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க குளிர்சாதன வசதி பஸ்களை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகம் தொழிலாளர்களுக்கும், பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனாலும் பயணிகளை கண்டிப்புடன் நடத்த முடியாத நிலை தொடர்கிறது. பயணிகள் நின்று பயணிக்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ள நிலையிலும் பாபநாசம், தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர் வழித்தடங்களில் தினமும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் நின்று கொண்டுதான் பயணிக்கின்றனர். இதனை தடுக்க முடியவில்லை. டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி எடுத்து பணி செய்துவந்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத நிலை பல வழித்தட பஸ்களில் காணப்படுகிறது. எனவே கொரோனா பரவல் தொற்றை தடுக்க அனைத்து வழித்தட ஏசி பஸ்களும்  நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை பஸ்கள் நிறுத்தம்

நெல்லையில் இருந்து மதுரைக்கு  2 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் நிலையில் இந்த குளிர்சாதன பஸ்கள் மட்டும் கடந்த 12ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில வழித்தடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை நிறுத்தலாமா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories:

>