கொரோனா பாதிப்பால் சுவாமி அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு ெதாழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டுகோ

நெல்லை, ஏப். 16: தென்  மாவட்டங்களில் அம்மன் கோயில்கள், சுடலை மாடன் கோயில் திருவிழாக்களில் சுவாமி அலங்காரம் மிகவும்  பிரசித்திப் பெற்றது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தனி கலைஞர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, சிங்கத்தாகுறிச்சி, அக்கநாயக்கன்பட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தச்சநல்லூர், டவுன், பேட்டை, முன்னீர்பள்ளம், சிவந்திப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த கலைஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தொடங்கும் திருவிழா சீசன் சித்திரை, வைகாசி மாதங்களில் அம்மன் கோயில் கொடை விழாக்கள், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் சுடலை மாடன் கொடை, புரட்டாசி மாதத்தில் தசரா திருவிழா என தொடர்ந்து 7 மாதங்கள் வரை சீசன் காலமாகும்.

இந்த திருவிழாக்களின் போது அம்மன், சுவாமியை சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்வர். தசரா திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் இடம்பெறும். இதன் மூலம் கலைஞர்கள், அவர்களது உதவியாளர்கள் என பலர்  வாழ்வாதாரம் பெறுவர். கொரோனா தடுப்பு காரணமாக கடந்த ஓராண்டாக கோயில் கொடை விழாக்கள், திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக சுவாமி அலங்கார கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே கோயில்  திருவிழாக்களின் போது அலங்காரத் தொழிலாளர்களை தொழில் செய்ய அனுமதிக்க  வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட  சுவாமி அலங்காரத் ெதாழிலாளர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் அழகுராஜ்  தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் தலைவர் அழகுராஜ் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா  வைரஸ் ஊரடங்கு காரணமாக எந்த விதமான தொழில்களும் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து மிகவும் கஷ்டப்படுகிறோம்.  சென்ற ஆண்டும் அரசின் எந்தவித நிவாரண  உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவதால் அரசின் ஊரடங்கு காரணமாக எங்களுடைய தொழில் மேலும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்துவதே பெரும்  சிக்கலாக உள்ளது. எனவே அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, தொழில்  செய்ய அனுமதி தந்து எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். சங்க துணை தலைவர் பழனிகுமார், செயலாளர் பட்டாணி, துணை செயலாளர்  பால்பாண்டி, பொருளாளர் மகேந்திரன், அவைத் தலைவர் மணிகண்டன், ஆறுமுகம்  ஆகியோர் உடன் சென்றனர். 

Related Stories:

>