ஊராட்சி தலைவர் மனைவியிடம் 5 சவரன் வழிப்பறி முகமூடி ஆசாமிகள் துணிகரம் தண்டராம்பட்டு அருகே கத்தியை காட்டி மிரட்டி

தண்டராம்பட்டு, ஏப்.15: தண்டராம்பட்டு அருகே ஊராட்சி தலைவர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5 சவரன் நகையை பறித்துச்சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த சகாதேவன்(45). இவர், சாத்தனூர் அணை பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி(41). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஓட்டலை பூட்டிவிட்டு சுமதி மட்டும் ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்குள்ள அந்தேரிகுளம் அருகே வந்தபோது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 முகமூடி ஆசாமிகள் திடீரென சுமதியின் ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். அவர் தடுமாறி நிற்க முயன்றார்.

அப்போது, மர்ம ஆசாமிகளில் ஒருவன், சுமதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டான். பின்னர், சுமதியை கீழே தள்ளிவிட்டு அவர்கள் பைக்கில் தப்பிக்க முயன்றனர். கீழே விழுந்ததில் காயம் அடைந்த சுமதி உதவி கேட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் முகமூடி ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து, அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சுமதி, நேற்று காலை சாத்தனூர் அணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>