வந்தவாசி அருகே துணிகரம் நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

வந்தவாசி, ஏப்.15: வந்தவாசி அருகே நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(35). வந்தவாசி அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், சதீஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். எனவே, தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டிக்கொண்டு இரவு பணிக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், வேலை முடிந்ததும், கணவர் வீட்டில் இல்லாததால் வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலயைில், நேற்று தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது.

மேலும், பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், டிஎஸ்பி தங்கராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து, கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>