×

வேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்

வேலூர், ஏப்.15: வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் 3,095 மெட்ரிக் டன் யூரியா, 535 மெட்ரிக் டன் டிஏபி, 720 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 2,296 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 6 ஆயிரத்து 646 கிலோ உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2020-2021ம் ஆண்டு விலையிலேயே 2021-2022ம் ஆண்டுக்கான டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்ய வேண்டுமென மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரம் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. மானிய விலை உரங்களை விற்பனை முறையை கருவியின் மூலம் விவசாயிகள் ஆதார் எண்ணைக் கொண்டு விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வகையில் நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.

உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின் போது உரிய ரசீது வழங்க வேண்டும். மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். மேலும் உரம் வாங்க செல்லும் போது அரசு அறிவித்துள்ளபடி சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

திடீர் ஆய்வின்போது மேற்படி வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ உரிய ஆவணமின்றி, உரம் விற்பனையில் ஈடுபட்டாலோ உரக் கட்டுப்பாடு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore District ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்