வேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்

வேலூர், ஏப்.15: முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளிடம் இதுவரை ₹16 லட்சத்து 55 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களில் வேகமெடுத்துள்ள கொரோனா பெருந்தொற்று பரவல், தமிழகத்திலும் தனது தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், தடுப்பூசி திருவிழாவும் தொடங்கியுள்ளது. அதேபோல் மருத்துவமனைகள் டாக்டர்கள் உட்பட கொரோனா சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. ஒருபக்கம் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்து வரும் நிைலயில் பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஓட்டல்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முகக்கவசம் அணியாமல் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளிடம் ₹200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை வரை வேலூர் மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து மொத்தம் ₹16 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரொக்கம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>