×

6 கி.மீ தூரம் பூமிக்கடியில் குழாய் பதித்து புதுவைக்கு எரிவாயு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை விரைவில் 2ம் கட்ட பணிகள் துவக்கம்

புதுச்சேரி,  ஏப். 15: புதுச்சேரி மாநிலத்துக்குள் 6 கி.மீ தூரத்துக்கு  பூமிக்கடியில் எரிவாயு குழாய் பதிக்கும் கிளை திட்டத்துக்கான  முதல்கட்ட ஆயத்த பணிகளை மத்திய அரசு முடித்துவிட்டது. விரைவில்  இதற்கான 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில்  திருவள்ளூர், எண்ணூர், பெங்களூரூ, நாகப்பட்டினம், மதுரை மட்டுமின்றி  புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  கட்டுப்பாட்டில் பூமிக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் 2015ம்  ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 4  வழித்தடங்களில் எரிவாயு குழாய் பாதை திட்டத்தை செயல்படுத்த  முடிவெடுக்கப்பட்டது.

சென்னை எண்ணூரிலிருந்து புதுச்சேரி வழியாக  நாகப்பட்டினத்திற்கு 325 கி.மீ தூரத்திற்கும், நாகப்பட்டினத்தில் இருந்து  தூத்துக்குடிக்கு 318 கி.மீ தூரத்திற்கும் நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி  வழியாக மதுரைக்கு 242 கி.மீ தூரத்திற்கும் எரிவாயு குழாய் பாதை அமைக்க  திட்டமிடப்பட்டது. மேலும் திருவள்ளூரில் இருந்து பெங்களூருக்கு 290 கி.மீ  தூரம் உள்பட 1,175 கி.மீ தூரத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை எண்ணூர்-நாகப்பட்டினம் எரிவாயு  குழாய் திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்குள் சுமார் 6 கி.மீ தூரத்திற்கு  கிளை எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இத்திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியை மத்திய  பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவிப்பாணையாக வெளியிட்டு முதல்கட்ட பணியை  ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு  வாதானூரில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான  சர்வே நம்பர், சப் டிவிஷன் என அனைத்தும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் புதிய அரசு  ஆட்சியமைத்தவுடன் 2ம் கட்ட பணிகளை மத்திய அரசு இன்னும் ஓரிரு மாதங்களில்  தொடங்க இருப்பதாக தெரிகிறது.

 இந்த குழாய் வழி எரிவாயு  திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மாநிலத்திற்குள் எரிவாயு சிலிண்டர்  கண்டெய்னர்கள், சிறிய வாகனங்களில் கொண்டு வருவது உள்ளிட்டவை முற்றிலும்  தடுக்கப்படும். மேலும் பயண நேரமும் குறைவதோடு நகர போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு கிடைக்கும். மேலும் மேட்டுப்பாளையம் எரிவாயு பகிர்வு முனையத்தில்  இருந்து புதுச்சேரியில் உள்ள வீடுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை  எரிவாயு வினியோகிக்கப்படும். எரிவாயு செல்லும் வழித்தடங்கள் புதுச்சேரியில்  கிளை எரிவாயு இணைப்பு திட்டம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி  ஈ.மண்டகப்பட்டு- வழுதாவூர், துத்திப்பட்டு, கரசூர்- கடப்பேரிக்குப்பம்-  பூத்துறை வழியாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதிக்குள் நுழைகிறது. அங்கு  எரிவாயு பகிர்வு முனையம் அமைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து  புதுச்சேரியின் பிற பகுதிகளுக்கு எரிவாயுவை பகிர்ந்தளிக்கும் வகையில்  இந்த  புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Tags : Puduvai ,
× RELATED பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது...