புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை இறப்பு உறவினர்கள் போராட்டம் தாய்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

புதுச்சேரி,   ஏப். 15: புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை   இறந்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு   ஏற்பட்டது. தாய்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் வனிதா(24). இவருக்கும்,   காலாப்பட்டு அடுத்த தமிழக மீனவ பகுதியான செட்டிநகரில் வசிக்கும் ராமு (28)   என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது நிறைமாத   கர்ப்பிணியான இவர், தலைப்பிரசவத்திற்காக புதுச்சேரியில் உள்ள தனது பெற்றோர்   வீட்டில் தங்கி எல்லைபிள்ளைச்சாவடி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள்   மருத்துவமனையில் அட்டை போட்டு காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்படவே, தாயுடன் அங்கு   வந்துள்ளார். அப்போது அனுமதி சீட்டு கொடுக்கப்படாமல் இரவு   முழுவதும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் வனிதா தங்க   வைக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று விடுமுறை தினம் என்ற நிலையில் வனிதாவை   மதியம் வரை மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்காத நிலையில் தகவல்   கிடைத்து திரண்ட உறவினர்கள், அங்கிருந்த பணியாளர்களுடன் வாக்குவாதத்தில்   ஈடுபடவே காலை 11 மணிக்கு பிறகு அட்மிட் செய்துள்ளனர்.

 பின்னர்   கர்ப்பிணி வனிதாவை பரிசோதித்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதுபற்றி   அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கணவர் மற்றும் பெற்றோர், உறவினர்கள் அங்கு கோஷமிட்டவாறு போராட்டத்தில்   ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்   தாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக   குற்றம் சாட்டினர்.

 தகவல் கிடைத்து வந்த மருத்துவமனை அதிகாரிகளும்,   ரெட்டியார்பாளையம் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்   பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணைக்கு பின் பணியில் தவறு செய்தவர்கள்   மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை அவர்கள்   கைவிட்டனர். இதனிடையே மகளிர் மருத்துவமனையில் வனிதாவுக்கு தொடர்ந்து   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது.

Related Stories:

>