×

திருச்சியில் கொரோனா தொற்று 90 சதவீதம் மாநகராட்சி பகுதியில் பதிவாகிறது

திருச்சி, ஏப்.15: திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை வேமாக பரவி வருகிறது. தினமும் 150 முதல் 200 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவில் 199 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதில் 90 சதவீதம் பேர் திருச்சி மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள். முன்பு இல்லாத அளவுக்கு கொரோனா மாநகர பகுதியில் வேகமாக பரவி வருகிறது.  கடந்த காலங்களில் தொற்றாளர்களில் பாதி அல்லது அதிகபட்சம் 60 சதவீதம் பேர் மட்டுமே மாநகர பகுதியை சேர்நதவர்களாக இருந்தனர். தற்போது 90 சதவீதம் பேர் மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிகாரிகள், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது திருச்சியில் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 450 படுக்கை வசதிகள், மணப்பாறை அரசு மருத்துவமனையில் 60, காஜாமலை பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் 200, சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 600 என 1,200 படுக்கை வசதிகள் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு விடுதிகள், தனியார் கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற கள ஆய்வு செய்து வருகின்றனர். துறையூர், மணப்பாறை, தொட்டியம், முசிறி பகுதிகளில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் இறுதி வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 65,672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 95 பொதுமக்கள் உள்பட இதுவரை 1,48,145 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Tags : Trichy ,Corporation ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...