திருவாரூர் மாவட்டத்தில் உரம் விலை உயர்வை கண்டித்து 20ல் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப். 15: ரசாயன உரம் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரியும், புயல், மழை பாதிப்பிற்கான எஞ்சிய நிவாரணத் தொகையை உடன் வழங்கிடக் கோரியும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வரும் 20ம் தேதியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் உற்பத்தி உயர்விற்கு அடிப்படையான ரசாயன உரங்களின் விலையை மத்திய அரசு 65 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

மூலப் பொருட்களின் விலைக்கேற்ப உர ஆலைகள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவின்படியும், மத்திய அரசு ஆலைகளுக்கு கொடுத்து வந்த வேளாண் பயன்பாட்டிற்கான உர மானியத்தை குறைத்து கொண்டதாலும் தற்போது டிஏபி, பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் வந்த எதிர்ப்பால் மத்திய அரசு தற்காலிகமாக இந்த விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக கூறி உள்ளது என்பது விவசாயிகளின்பால் காட்டும் கருணை இல்லை. சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றி பறிபோய்விடும் என்பதால்தான்.

மத்திய அரசு நடப்பாண்டு நெல் விலையை 2.5 சதம் உயர்த்தியது. ஆனால், உரங்களின் விலையையோ 65 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடிக்கான ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அரசின் புள்ளி விபரங்களிலிருந்து இது தெரியும். ஆனால், அதற்கேற்ப உரங்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு உயர்த்துவது இல்லை. மாறாக குறைத்து வருகிறது. வேளாண்மைக்கான கூடுதல் ரசாயன உர பயன்பாடு என்பது அரசின் நிதி விரயமாக பார்க்கப்பட்டால் இயற்கை வேளாண்மைக்கு திரும்ப வேண்டி வரும். இதற்குரிய ஏற்பாடும் அரசிடம் இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மகசூல் என்பது பெரிய அளவு குறையும்.

இதன் காரணமாக விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவர். அப்போது பன்னாட்டு கம்பெனிகள் உணவு தேவைக்கென வேளாண்மையில் ஈடுபடுத்தப்படுவர் என்ற எண்ணம் அரசிடம் உள்ளது. கம்பெனிகள் ஈடுபட்டால் அரசு கூறுவதுபோல் மும்மடங்கு விளைச்சல் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் வாழ்வறியா நிலையில் தள்ளப்படுவர். நுகர்வோர் நஞ்சு நிறைந்த உணவை உட்கொள்வர். எனவே மத்திய அரசு நிரந்தரமாக இந்த உரம் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். அரசின் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வேளாண் பயன்பாட்டிற்கான உரங்களையும் சேர்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில் கட்டுப்பாடு செய்திட வேண்டும். மேலும் 2020-21ம் ஆண்டு ஏற்பட்ட புயல், மழை பாதிப்பால் வேளாண் மகசூல் இழப்பிற்குள்ளானது. திரும்பவும் வளிமண்டல சுழற்சியால் பெரு மழை தொடர்ந்து எஞ்சியிருந்த பயிர்களையும் அழித்தது. தொடர் போராட்டங்களால் எஞ்சிய நிலங்களுக்கும் பயிர் நிவாரணம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்து கணக்கெடுத்து முடித்தது. ஆனால், இடையிலே வந்த தேர்தல் நடத்தை விதி சூழலால் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த நிவாரணத் தொகையை வாக்குப்பதிவு முடிந்த நிலையில் உடனடியாக தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 20ம் தேதியன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றிய, நகர தலைநகரங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கெடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>