×

திருவாரூர் மாவட்டத்தில் 2வது அலை தீவிரம் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர், ஏப்.15: திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 18 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது 659 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவாரூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 172 பேரும், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 62 பேரும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 37 பேரும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 33 பேர் என ஆக மொத்தம் 659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் திருவாரூர் நகரில் மட்டும் கொடிக்கால்பாளையம், புது தெரு, வடக்கு வடம்போக்கி தெரு, வாசன் நகர், மேலவீதி என நகரில் மட்டும் 20 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 117 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பகுதியில் நகராட்சியினால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனோ தடுப்பு வேலி அமைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற மறுப்பு

நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. நோய் தொற்று ஏற்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.தகவலறிந்த தாசில்தார் மணிமன்னன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3 பேர் மட்டும் சிகிச்சைக்கு செல்ல சம்மதித்தனர். பின்னர் சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தவர்கள் மீது நீடாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள்தெளிக்கப்பட்டது.

Tags : Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...