தமிழ்புத்தாண்டையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை வழிபாடு

கும்பகோணம், ஏப்.15: சுவாமிமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று திருப்படி பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். முருகனின் அறுபடைவீடுகளுள் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புடைய இந்த கோயிலில் தமிழ்புத்தாண்டு நாட்களில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்புத்தாண்டு தினமான நேற்று சித்திரை மாதம் பிறந்ததை முன்னிட்டு நேற்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பிலவ ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் மழை வளம் அதிகம் பொழியவும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெறவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

திருப்படித்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories:

>