×

கொரோனா அச்சமின்றி வாரச்சந்தையில் திரண்ட மக்கள் கூட்டம்

அறந்தாங்கி, ஏப்.15: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அதிகரிக்கும்போது அறந்தாங்கி வாரச்சந்தை மூடப்பட்டது இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோணா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அறந்தாங்கி வாரச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் முகக் கவசம் அணியாமலும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

வாரச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கிய நிலையில், அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் நகராட்சி ஆணையர் பொறுப்பு அய்யனார் தலைமையில் வாரச் சந்தைக்கு வெளியே முக கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இருப்பினும் வாரச்சந்தையில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் நெருக்கியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கியதை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அறந்தாங்கி வாரச்சந்தையில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா அபாயம் தெரியாமல் பொதுமக்களும் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் பொருள்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே பொது சுகாதாரத் துறையினர் அறந்தாங்கி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நேற்று அறந்தாங்கி வாரச் சந்தைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...