கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஜெயங்கொண்டம், ஏப்.15: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்தாண்டு தற்போது கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக வீசி வருவதால், தமிழக அரசின் சார்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்து, முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் வளாகம் முழுவதும் பணியாளர்களை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து எப்போதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும் கங்கைகொண்டசோழபுரம் கோயில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

More