காஞ்சி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளால் கோயில்களுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது

காஞ்சிபுரம், ஏப்.15: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சித்திரை திருநாளான தமிழ்ப் புத்தாண்டு பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வரதராஜ பெருமாள், அழகிய சிங்க பெருமாள், அஷ்டபுஜம் பெருமாள், உலகளந்த பெருமாள் உள்பட பல கோயில்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு நடத்தினர்.

குமரக்கோட்டம் முருகன் கோயிலில் அதிகாலை வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இங்கு வந்த பக்தர்கள் கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று மாகரல் மாகரலீஸ்வரர் கோயில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர விருட்ச விநாயகர், அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், சனீஸ்வரர், ராகு-கேது உள்பட 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு அபிஷேக அலங்கார மஹா தீபாராதனை நடைபெற்றது.  திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. சார்வரி ஆண்டு முடிந்து பிலவ ஆண்டு பிறந்ததையடுத்து தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து காலை முதலே பலரும் கோயில்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். இதையொட்டி, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு  கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு பக்தர்களும், சமூக  இடைவெளி விட்டு நிற்க வைத்து  முருகப்பெருமானை தரிசித்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.   

Related Stories:

>