வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை: கண்டு கொள்ளாத நெடுஞ்சாலைத் துறை

வாலாஜாபாத், ஏப்.15: வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் மரத்தின் கிளை முறிந்து, அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையை ஒட்டி 50க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக செங்கல்பட்டு, தாம்பரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், மறைமலை நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் பல தனியார் தொழிற்சாலைகளுக்கு லாரி, பஸ், கார் உள்பட 100க்கும்  மேற்பட்ட வாகனங்கள் தினமும் இரவு, பகலாக சென்று வருகின்றன.  இதுமட்டுமின்றி பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களும் இச்சாலை வழியாக செல்வது வழக்கம்.

இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த ஏகனாம்பேட்டை சிவன் கோயில் எதிர்திசையில், சாலையை ஒட்டியுள்ள புளியமரத்தின் கிளை கடந்த மாதம் காற்றில் முறிந்து விழுந்தது. அதனை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் இரவு நேரங்களில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் வாலாஜாபாத் - காஞ்சிபுரம் செல்லும்  சாலையை ஒட்டி இருபுறமும் 100க்கும் மேற்பட்ட  மிகப்பெரிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் உள்ள காய்ந்த கிளைகள் அடிக்கடி விழுவதும், அதனை அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோல், ஏகனாம்பேட்டை சிவன் கோயில் எதிர் திசையில் உள்ள புளிய மரத்தின் கிளை கடந்த  மாதம் முறிந்தது. ஆனால், அந்த கிளை கீழே விழாமல், அந்தரத்தில் தொங்கியபடி காணப்படுகிறது.

இதனால், எதிரே கனரக வாகனம், வரும்போது ஒதுங்கி போக முடியாத சூழல் அல்லது விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகில் செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.   மேலும், இரவு நேரங்களில் அந்தரத்தில் தொங்கும் மரம் தெரியாமல் வாகனங்கள் திக்குமுக்காடி செல்வதும் தொடர்கதையாகிறது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த மரக்கிளையை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: