கொட்டமடிக்கும் கொரோனா விருதுநகர் மார்க்கெட்டில் கும்மாளம் போடும் மக்கள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

விருதுநகர், ஏப். 15: கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் விருதுநகர் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திரிந்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டும், காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா முதல் அலை பரவலில் உள்ளாட்சி அமைப்புகள் கிருமிநாசினி தெளிப்பு, சமூக இடைவெளி பிரசாரம், மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரம் காட்டியது. தற்போதைய இரண்டாம் அலை பரவலில் எதையும் செய்யவில்லை.

விருதுநகர் நகராட்சி நிர்வாக இயந்திரம் கடந்த சில மாதங்களாக முடங்கி கிடக்கிறது. நகரில் தொற்று பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு உள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை. விருதுநகர் மெயின் பஜார் கடைவீதியில் மக்கள் சமூக இடைவெளியின்றி, மாஸ்க் அணியாமல் சென்று வருகின்றனர். குறுகிய சந்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில், மக்கள் நெரிசலில் சென்று காய்கறி வாங்கி செல்கின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைவீதிகளை ஒழுங்குபடுத்த, சமூக இடைவெளி கடைப்பிடித்து பொருட்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகள், நடவடிக்கைகள் எதுவும் செய்யவில்லை. முதல் அலை பரவலின் போது காய்கறி மார்க்கெட் புதிய பஸ்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மார்க்கெட்டிற்கு வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்பு, சோப் மூலம் கைகளை கழுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இரண்டாம் அலை பரவலில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு அதிகம் இருக்கும் என மத்திய, மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் மாவட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாவட்டத்திற்கு கூடுதல் கண்காணிப்பிற்கு நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி மதுமிதா வரவே இல்லை. முதல் பரவலின் போது, ஓராண்டில் இருமுறை மட்டும் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்புக்கு மீட்டிங் போட்டு, சில பகுதிகளை சுற்றிப்பார்த்து சென்றார். இம்முறையும் அவரே கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசு நியமனம் செய்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், மாவட்டத்திற்கு வந்து எந்த கண்காணிப்பு மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டாம் தொற்று பரவலில் மாவட்டத்தில் பாதிப்பு அதிகமானால், அதற்கு மாவட்ட உயர்அதிகாரிகளே காரணமாக இருப்பார்கள் என சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>