×

மேற்குத்தொடர்ச்சி மலையில் மலைமாடு மேய்ச்சலுக்கு அனுமதி கிடைக்குமா? போதிய தீவனம் இன்றி மெலிந்து வருகின்றன

வத்திராயிருப்பு, ஏப். 15: வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, புதுப்பட்டி, சேதுநாராயணபுரம், தாணிப்பாறை, நெடுங்குளம், மகாராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாட்டு மலை மாடுகள் ஆயிரக்கணக்கில் வளர்த்து வருகின்றனர். நாட்டு மலைமாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் வருடத்திற்கு ஆறு மாதம் மேயும். பின்னர் விவசாய வயல்களில் மாடுகளை வைத்து கிடைபோட்டு அந்த உரத்தினால் நெல் விவசாயம் செய்து வருவார்கள். ஆனால் கடந்த மூன்று வருடமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மாடுகளை அனுமதிக்கவில்லை. இதனால் மாடுகள் போதிய தீவனம் இன்றி மெலிந்து வருகின்றன. அதேபோன்று மேய்ச்சல் தொழிலில் ஈடுபடக்கூடிய தொழிலாளிகள் போதிய வருவாய் இல்லாததால் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து கான்சாபுரத்தைச் சேர்ந்த மாட்டின் உாிமையாளர் சுரேஷ் கூறுகையில், ‘கடந்த 3 வருடங்களாக எங்கள் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. மாடுகள் மேய்ச்சல் இல்லாத நிலையில் அழிந்து போகக்கூடிய நிலையில் உள்ளது. மலையில் உள்ள யானை, கரடி, காட்டுமாடு, காட்டுபன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அடிவார பகுதியில் தோட்டங்களில் உள்ள மாமரங்களையும், மாங்காய்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து வனத்துறையினரிடம் புகார் தொிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மாடுகளை மேய்க்க கூடாது எனக்கூறும் வனத்துறையினர் எங்கள் தோட்டங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை மட்டும் தடுக்காமல் விடுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் மாடுகளை மேய்ப்பதற்கு பல்ேவறு போராட்டங்கள் நடத்தியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறையினரும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மலைமாடுகள் அழிந்து போகும் சூழ்நிலை உள்ளது. எனவே வருகின்ற அரசு மலைமாடுகளை மலைகளில் மேய்க்க அனுமதி தரவேண்டும்’ என்றார்.

Tags : Western Ghats ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...