×

வேலப்பர் கோயிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார் கொரோனா கட்டுப்பாடுகளால் நடவடிக்கை



ஆண்டிபட்டி, ஏப்.15: ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா  வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கிடா வெட்டி பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெறும். விழாவிற்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். இந்நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது. ஆகம விதிப்படி கோயிலில் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பங்கேற்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை. பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறநிலையத்துறையினர் அறிவித்தனர்.

பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தடுக்கும் வகையில் ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் மற்றும் தெப்பம்பட்டி பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. நேற்று சித்திரை முதல் தேதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் படையெடுத்து மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு வந்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு கோயிலில் தங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும் காவடியுடன் பக்தர்கள் வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் காவடி எடுத்து வந்த பக்தர்களை பாதியிலேயே திருப்பியதால் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்தனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...