×

ஆண்டிப்பட்டியில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு

ஆண்டிபட்டி, ஏப்.15: ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதியுற்று வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் கடந்த சில நாட்களாக அரசு தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களாக கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ராஜதானி, பாலக்கோம்பை, திம்மரசநாயக்கனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல் சேவை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் சர்வரும் செயல்படாத காரணத்தால் வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆண்டிப்பட்டிக்கு இணைப்பு வழங்கும் கேபிள் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால் தான் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கேபிள் பழுது பார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறினர். தனியார் தொலைதொடர்பு சேவைகளில் 4ஜி சேவைகள் வழங்கி 5ஜி சேவைக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 3ஜி சேவை மட்டுமே வழங்கி வரும் பி.எஸ்.என்.எல் சேவை அடிக்கடி துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ஆண்டிபட்டி பகுதிகளில் மழை பெய்ததால் சேவை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பி.எஸ்.என்.எல் சேவை தொடர்ந்து கிடைக்கவும் சேவைகளை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : BSNL ,Andipatti ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...