×

மீண்டும் கொரோனா பரவல் சித்திரை விழா ரத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு டெக்கரேசன் தொழிலாளிகள் கண்ணீர்

தொண்டி, ஏப்.15: கொரோ னா தொற்று வேகமாக பரவி வருவதால், டெக்கரேசன் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக கண்ணீர் மல்க கூறினர். கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது முன்பைவிட வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை இறங்கியுள்ளன. இந்நிலையில் வழிபாட்டுத்தலங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும் மத கூட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்தவும் முற்றிலுமாக தடை விதித்துள்ளனர்.

திருமண விழாவில் குறைந்தளவு எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவில் திருவிழாக்கள் திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்விற்கும் பந்தல் போடுபவர்கள் மற்றும் டெக்கரேசன் செய்பவர்கள் தங்களின் தொழில் முற்றிலுமாக முடக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக கூறுகின்றனர். கடந்த வருடமும் இதேபோல் தடை விதித்ததால் கடன்களை வாங்கி தங்களின் வாழ்வை நகர்த்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது சித்திரை திருவிழாவில் அதிகமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர். ஆனால் சித்திரை திருவிழா முற்றிலுமாக தடை செய்யப்பட்டதால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

திருவொற்றியூர் சாய் முத்துகிருஷ்ணன் கூறியது, பந்தல் மற்றும் டெக்கரேசன் தொழிலாளர்களுக்கு சித்திரை மாதத்தில் அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்து வருமானம் அதிகமாக கிடைக்கும். கடந்த வருடம் சித்திரை திருவிழா முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் அதிகமாக வாங்கினோம். இந்த வருடம் சித்திரை திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை திருவிழா கிராமங்கள் தோறும் உள்ள கருப்பன் மற்றும் அய்யனார் கோவில்களில் நடைபெறும் என்பதால், சுற்றுவட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் திருவிழா நடைபெறும். இது எங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருந்தது. ஆனால் இந்த வருடம் அனைத்து கிராமங்கள் மற்றும் ஊர்களிலும் திருவிழா நிறுத்தப்பட்டதால் மேலும் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அதனால் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு திருவிழா நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Corona Spreading Festival ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு