சித்திரை முதல் நாளை முன்னிட்டு குன்றத்தில் உழவுத்திருவிழா

திருப்பரங்குன்றம், ஏப்.15: சித்திரை முதல் நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் கிராம மக்கள் சார்பாக  ஏர் உழவு திருவிழா நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் நான்கு ஏர் பூட்டி உழவுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த விழா நேற்று வழக்கம் போல் நடைபெற்றது. சித்திரை மாதம் முதல் நாளான நேற்று காலை  கிராம விவசாயிகள் சார்பில் முதல் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முன் புதிய மூங்கிலை தார் கம்பாக செதுக்கி அதில் ஆணி அடிக்கப்பட்டு. பின்னர் அந்த  தார்க்கம்புகளை இன்றைய தலைமுறையை சேர்ந்த சிறுவர், சிறுமிகளின்  கையில் கொடுத்து முருகப் பெருமானை வணங்கி பூஜை செய்து பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் திசைக்கு ஒன்று என நான்கு ஜோடி மாடுகளை கொண்டு கலப்பையை ஏரில் பூட்டிய மாடுகளுடன் நான்கு திசைகளிலும்  நிலத்தை புதிதாக உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான்கு ஏர் பூட்டிய  காளைகளுடன் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள  விவசாய நிலங்களை உழுதனர். பல நூறு ஆண்டுகளாக பல தலைமுறையினரால் இந்த ஏர் உழும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி விவசாயக்கூலி உள்ளிட்டவற்றை நிர்ணயம் செய்தனர். இதில் ஏராளமான விவசாயிகள்  குடும்பத்துடன்  கலந்து கொண்டனர்.

Related Stories:

>