×

நத்தம் பகுதியை ஏமாற்றும் கோடை மழை கவலையில் மா விவசாயிகள்


நத்தம், ஏப். 15: நத்தம் பகுதியில் கோடை மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால் மா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நத்தம் பகுதியில் காசம்பட்டி, வத்திபட்டி, மணக்காட்டூர், குட்டுப்பட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, புன்னப்பட்டி, துவராபதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் பெரும்பாலும் மலையும், மலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த காலங்களில் பருவமழையாது தொடர்ந்து பெய்து வந்ததால் மருந்து தெளிக்க வேண்டிய நேரத்தில் மருந்து தெளிக்க முடியாமல் மா விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

தொடர்ந்து பின்தங்கி மருந்துகள் தெளிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பின்னர் மா மரங்களில் தேன் ஒழுகுதலை பூக்களில் புழுக்கள் வைத்தன. அதை தொடர்ந்து மரங்களில் மிஞ்சிய பூக்களில் இருந்து பிஞ்சுகள் வைத்து காணப்பட்டன. இதனால் மகசூல் பாதிக்கும் என்ற நிலையில் விவசாயிகள் கவலையுடன் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் நத்தம் பகுதியில் இதுவரை மழை பெய்யாததால் மா விவசாயிகள் மேலும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில், ‘கார்த்திகை, மார்கழி மாதங்களில் தொடர்மழை காரணமாக மருந்து தெளிக்க முடியவில்லை. மழைக்கு பின் மருந்து தெளித்ததை தொடர்ந்து பெரும்பாலான மரங்களில் பூக்கள் பூத்தது. அவற்றிலும் தேன் ஒழுகுதல் காரணமாக புழுக்கள் வைத்து பூக்கள் கருகிவிட்டன. இதனால் மரங்களில் எஞ்சிய பூக்களில் பிஞ்சுகள் வர துவங்கியுள்ளது. ஆனால் தற்போது கோடையின் வெப்பம் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. எனவே கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவ்வாறு கோடை மழை விழுந்தால்தான் மாம்பிஞ்சுகள் பெருக்கமடைந்து நல்ல எடையுடனும் நீர்ச்சத்துடனும் இருக்க வாய்ப்பாக அமையும். அப்போதுதான் மரங்களிலிருந்து பெரும் மாம்பழங்கள் மூலம் நல்ல விலை கிடைக்கும். இல்லாவிடில் லாபம் கிடைப்பது அரிதாகி மா விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும்பாதிப்புக்குள்ளாகும் நிலையே உள்ளது’ என்றனர்.

Tags : Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா