×

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 4 லாரிகள் சிறைபிடிப்பு

சாத்தான்குளம், ஏப். 15:  சாத்தான்குளம் அருகே  தேர்க்கன்குளத்தைச் சுற்றி 4 கல்குவாரிகள் உள்ளன.  இந்த குவாரிகளிலிருந்து பாராங்கற்கள், மற்றும் மணல்கள் டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. லாரிகள் அதிக பாரம் ஏற்றி அதிவேகத்துடன் தேர்க்கன்குளம் குடியிருப்பு வழியாக சென்று வருவதாகவும், இதனால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். கடந்த 2 மாத்திற்கு முன்பு பாராங்கற்களை ஏற்றிய லாரி ஊர் வழியாக சென்ற போது குடியிருப்பு வீட்டுக்குள் லாரி புகுந்தது. அப்போது அப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

இதேபோல் நேற்று அப்பகுதியில் லாரி அதிவேகமாக அதிகபாரம்  ஏற்றி சென்றதில் பாராங்கல் லாரியில் தவறி விழுந்தது. அப்போது குடியிருப்பு அருகில் நின்ற பெண் காயமின்றி தப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தேர்க்கன்குளம் மக்கள் திரண்டு அப்பகுதி வழியாக பாராங்கல் மற்றும் ஆற்றுமணல் அள்ளி வந்த 4 லாரிகளை மறித்து சிறைப்பிடித்தனர். இதையடுத்து சாலை மறியல் செய்யபோவதாக பொதுமக்கள்  கலெக்டர், எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெயா,  மீரான்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், எஸ்.ஐ ராஜா ஆகியோர்  விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் அதிகம் பாரம் ஏற்றிகொண்டு லாரிகள் இந்த வழியாக செல்கிறது.

இப்பகுதியில் பள்ளி மற்றும் குடியிருப்பு  பகுதிகள் உள்ளன. அந்த லாரிகளால் மக்கள் விபத்தில் சிக்கும்  நிலை தொடர்கிறது. எனவே,  இந்த லாரிகள் ஊருக்குள் வந்து செல்லாமல் வேறு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த தாசில்தார் செல்வகுமார், புகார் மனுவாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு லாரியை விடுவித்தனர். அதில் லாரியில் அளவுக்கு மீறிய பாராங்கல் ஏற்றிய நிலையில் நின்றதால் காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...