×

சித்திரை விசு தரிசனத்துக்கு தடை பாபநாசம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் போலீசார் அனுமதி மறுப்பால் திரும்பி சென்றனர்

வி.கே.புரம், ஏப். 15:  சித்திரை விசு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பாபநாசம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால், பாபநாசம் கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்றிரவு தெப்ப உற்சவமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சித்திரை விசுவையொட்டி நேற்று காலை முதல் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பாபநாசம் கோயிலுக்கு வந்தனர். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள டாணா பகுதியில் போலீசார் செக்போஸ்ட் அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள், தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் பாபநாசம் கோயில் தாமிரபரணி ஆற்றிலும் பக்தர்கள், பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டு ஆற்றுப்பகுதியில் கயிறு கட்டி தடுப்பு அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

Tags : Papanasam temple ,
× RELATED அம்பை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது