×

நாக் கமிட்டி வருகையையொட்டி சேலம் பெரியார் பல்கலை.,யில் விசாரணை குழுக்கள் அமைப்பு

சேலம், ஏப். 15: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி வருகைக்காக பல்வேறு வகையான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டுக் குழு (நாக் கமிட்டி) வழங்கிய, அந்தஸ்து சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது மீண்டும், நாக் கமிட்டியினர் ஆய்வு நடத்தி அந்தஸ்து வழங்க, பல்கலைக்கழக தரப்பில் இருந்து  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓரிரு மாதங்களில் நாக் கமிட்டி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாக் கமிட்டி வருகைக்காக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், இரவு, பகலாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக எஸ்சி., எஸ்டி பிரிவு, மிகவும் பிற்படுத்தப்டோருக்கான பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, புகார் விசாரணை குழு என பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்த கமிட்டிகள் பெயரளவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவும் சர்ச்சை எழுந்துள்ளது.

 இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘நாக் கமிட்டி அந்தஸ்து முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது திடீரென ஆய்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்காமல், பெயரளவிற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் எழும் பாலியல், வன்கொடுமை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயான மோதல் புகார்கள் குறித்து விசாரிக்க, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பேராசிரியர் ஒருவர் தலைவராகவும், இணை பேராசிரியர்கள் 2 பேர், பணியாளர்கள் 2 பேர் மற்றும் மாணவர்கள் 3 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதேசமயம், பல்கலைக்கழகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவி பேராசிரியர்கள் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. மேலும், மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே குழுவில் உள்ள பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களின் துறையை சார்ந்தவர்கள் தான். பிற துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை,’’ என்றனர்.

Tags : Committees ,Salem ,Periyar ,University ,Knock Committee ,
× RELATED சென்னையில் மாற்றுத்திறனாளிகள்...