×

அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கிருஷ்ணகிரி, ஏப்.15: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது, கொரோனா சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களுக்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட தலைமை மருத்துவமனையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள 512 படுக்கைகளில் 450 படுக்கைகளுக்கு, 24 மணி நேரமும் தங்கு தடையின்றி நேரடியாக ஆக்சிஜன் செலுத்தும் வகையில், ₹30 லட்சம் மதிப்பில் புதிதாக 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க்  அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் முத்துசெல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தன் மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Government General Hospital ,
× RELATED மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி