×

தர்மபுரியில் முன்னறிவிப்பின்றி கோயில்கள் மூடல்

தர்மபுரி, ஏப்.15: தர்மபுரியில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, முக்கிய கோயில்கள் அனைத்தும் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருந்ததால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். தமிழ் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரும்பாலான மக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். தர்மபுரியில் நேற்று அதிகாலை, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்ற போது கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில், பரவாசுதேவர் கோயில் ஆகியவற்றில் சுவாமி, அம்மன், அம்பாள் சன்னதிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் வாசலில் நின்றபடி சாமி கும்பிட்டு திரும்பி சென்றனர். அதேபோல், நகரின் முக்கிய கோயில்களான சாலை விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், கடைவீதியில் உள்ள வெங்கட்ரமண பெருமாள் கோயில், குமாரசாமிபேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும் மூடப்பட்டிருந்தது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

சாலை விநாயகர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்  இன்று(நேற்று) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக கோயில் அர்ச்சகர்கள் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு, குமாரசாமிபேட்டை மாரியம்மன் கோயிலில் இன்று(நேற்று) நடக்க இருந்த கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை போலீசார் ரத்து செய்தனர். இதனால் பூட்டப்பட்டிருந்த கோயில் முன்பு பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். முன்னறிவிப்பின்றி கோயில்கள் மூடப்பட்டதால், புத்தாண்டு தினத்தன்று சாமி கும்பிட வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், ‘கோயில்களை பூட்ட நாங்கள் உத்தரவிடவில்லை. உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதனிடையேத, தர்மபுரி மாவட்ட இந்து முன்னணியினர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் மற்றும் குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயில்கள் முன்பு திரண்டனர். டவுன் போலீசார் கூறியதால் கோயிலை பூட்டினோம் என கோயில் ஊழியர்கள் கூறியதால், கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பகல் 11.30 மணியளவில் கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...