×

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.15: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த எஸ்.கிருபாகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்யாண வரதராஜ பெருமாள் என்ற பழமையான கோயில் திருவொற்றியூரில் உள்ளது. கடந்த ஆண்டு ரூ.37.50 லட்சம் செலவில் இந்த கோயிலின் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இதற்கிடையே ராஜகோபுரத்தில் பூசப்பட்ட வர்ணங்கள் நிறம் மாறத்தொடங்கியுள்ளன. கோபுரத்தில் பல இடங்களில் கீறல்களும் விழுந்துள்ளன.

எனவே, இந்த கோயிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் துரைராஜ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Tiruvottiyur ,Kalyana Varatharaja Perumal Temple ,Kumbabhishekam ,High Court ,
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...