திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 640 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வரும் 19ம் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை, ஏப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வரும் 19ம் தேதி பயிற்சி வகுப்பு நடக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியிலும், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதிகளுக்கு ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த வளாகத்தில் தங்கியிருந்த கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முகவர்கள் நேரில் கண்காணிக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றுக்கும், 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் 29 சுற்றுகளும், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் தொகுதிகளில் 25 சுற்றுகளும், செங்கம், ஆரணி தொகுதிகளுக்கு 28 சுற்றுகளும், போளூர், வந்தவாசி தொகுதிகளுக்கு 24 சுற்றுகளும், செய்யாறு தொகுதிக்கு 25 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில், ஒரு மேசைக்கு 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். அதையொட்டி, 8 தொகுதிகளுக்கும் 640 அரசு அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வரும் 19ம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்ணிக்கையை மேற்கொள்ளும் நடைமுறைகள், ஒப்புகை ரசீது இயந்திரங்களில் (விவிபேட்) பதிவான வாக்குச்சீட்டுகளை எண்ணுவது, தபால் வாக்குகள் எண்ணிக்கை போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

Related Stories:

>