×

கலசபாக்கம், செங்கம், தண்டராம்பட்டில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் அதிகாரிகள் அதிரடி

கலசபாக்கம், ஏப்.14: கலசபாக்கம், செங்கம் மற்றும் தண்டராம்பட்டில் கொரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர். கலசபாக்கம் வட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதற்காக சுகாதாரத் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராம் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சோழவரம், மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செங்கம்: செங்கம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கடைகளில் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா 2வது அலை தாக்கம் அதிகரித்து வருவதால், கழிவுநீர் கால்வாய்களில் மருந்து தெளிப்பது, கழிவறை உள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு- தானிப்பாடி சாலையில் நேற்று திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி அண்ணாதுரை முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்கி தலா ₹200 அபராதம் விதித்தார். மேலும், துண்டு பிரசுரம் வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags : Sengam ,Thandarampattu ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்