×

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி தாமிரபரணியில் கூட்டமாக குளிக்க தடை

நெல்லை, ஏப். 14: கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க தடை விதித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 200க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று பரவியது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களாக முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முக கவசம் இன்றி பலர் வெளியில் உலா வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறுவதால் பல்வேறு தடைகள் விதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நெல்லையை பொறுத்தவரை தாமிரபரணி ஆறு புனித நதியாக கருதப்படுகிறது. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி 130 கிமீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

பாபநாசம் தொடங்கி கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை, சீவலப்பேரி, வல்லநாடு, வைகுண்டம், ஏரல், ஆத்தூர் வரை தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் ஆற்றில் குளிப்பது பொதுமக்கள் வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா தடை காலத்தில் தாமிரபரணி ஆற்றில் பல மாதங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது திருவிழா காலங்களிலும், முக்கிய பண்டிகை நாட்களிலும், முன்னோர்கள் வழிபாட்டிற்கும் கூட தாமிரபரணி ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்ைல. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகே ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக குளிக்க தடை விதித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் கூட்டம், கூட்டமாக நெருக்கமாக அமர்ந்து குளிப்பது வழக்கம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து கூடியிருக்கும் பலருக்கும் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றில் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் கூட தடை விதித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tamiraparani ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு