×

கொரோனா பாதித்தோரை அனுமதிக்க 415 படுக்கை வசதிகளுடன் கூடுதலாக 3 சிகிச்சை மையம்

நெல்லை, ஏப். 14: நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2வது கட்ட பரவல் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி உள்பட 3 கொரோனா சிகிச்சை மையங்களில் 415 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் கட்ட பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் தினமும் மூன்று இலக்கமாக தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது.  இதனால் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம மருத்துவமனை, கூடங்குளம் அரசு மருத்துவமனைகள் உள்பட மருத்துவமனைகளில் 415 படுக்கைகளுடன் மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா மையத்தை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து கலெக்டர் விஷ்ணு தெரிவித்ததாவது: நெல்லை மாவட்டத்தில் 2வது அலை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆயிரத்து 240 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கையும், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு மருத்துவமனையில் 110 படுக்கையும், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 105 படுக்கைகள் என மொத்தம் 415 படுக்கைகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கூடுதலாக மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து, மாத்திரைகள், மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன.  பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதார துறை, உள்ளாட்சி துறையினர் என தனித்தனி குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் திருத்தணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு