×

உடுமலை அருகே நல்லாற்றில் மணல் திருட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு

உடுமலை, ஏப். 14: உடுமலை அருகே நல்லாற்றில் நூதன முறையில் மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். உடுமலையையடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மழைநீர் ஓடைகள் வழியாக நல்லாற்றில் கலந்து தேவனூர் புதூர், அர்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பயணம் செய்து ஆழியாறில் கலக்கிறது. இந்த ஆறு வழி நெடுகிலும் உள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பகுதிகளின் நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் நல்லாற்றில் மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து வி வசாயிகள் கூறியதாவது:கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் மணலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மணலுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

இதனைப் பயன்படுத்தி ஒருசில சமூக விரோதிகள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நல்லாற்றில் விவசாயிகளின் நலன் கருதி ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த தடுப்பணைகளில் அதிக அளவில் மணல் தேங்கி நிற்கும். வரப்பள்ளம் என்ற பகுதியில் தடுப்பணைகளில் தேங்கியிருக்கும் தண்ணீருடன் சேர்த்து மணலையும் உறிஞ்சி பின்னர் அதனை வடிகட்டி நூதன முறையில் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதேபகுதியில் நூதன முறையில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்தமுறை ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மணல் திருட்டில் ஈடுபடாமல் ஆற்றங்கரைகளில் புதர் மறைவில் மணலை அள்ளுகின்றனர்.இந்த மணல் நடுப்பகுதியில் இருப்பது போல தரமானதாக இருக்காது.எனவே இதனை சல்லடையில் சலித்து இரவோடு இரவாக கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று விவசாயிகள் கூறினர்.


Tags : Nallar ,Udumalai ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்