×

மத்திய அரசு நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்

திருப்பூர், ஏப். 14: மத்திய அரசு நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி குழுக் கூட்டம், ஊத்துக்குளி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னச்சாமி பங்கேற்று, மாநில நிர்வாகக் குழு முடிவுகள் குறித்து பேசினார். பொருளாளர் நடராஜன், சங்க பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து  பேசினார்கள்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருப்பூர் மாவட்டம் தொழிலாளர் நிறைந்த மாவட்டம். நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தொற்றைத் தடுக்க, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை, தொழிற்சாலைகள் உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தொற்றை தடுக்க, பனியன், பஞ்சாலை, உணவகம், ஜவுளி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையளித்து வரும் ஜவுளித் தொழில் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு பனியன் ஏற்றுமதியின் மூலம் அன்னிய செலாவணி ரூ.45,000-ம் கோடிக்கு மேல் ஈட்டப்படுகிறது. ஆனால் தற்போது நாள்தோறும் ஏறிவரும் நூல் விலை ஏற்றத்தால் ஜவுளித் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கித்  தவிக்கிறது. பனியன் தொழிலை பாதுகாக்க தாறுமாறாக ஏறிவரும் நூல்விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக என்டிசி நூற்பாலைகள் மூலம், நூல் உற்பத்தி செய்து நியாயமான விலையில் வழங்கி பனியன் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்  உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்