×

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல்

ஊட்டி, ஏப். 14:  ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாலையோரங்கள், பெரிய கட்டிடங்களின் வளாகம் மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகம் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரங்கள் நெடு நெடுவென வளர்ந்தாலும், இதன் ஆணிவேர் மிகவும் சிறியது. இதனால், சிறிய காற்று அடித்தாலும் விழுந்துவிடும். அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் இதன் கிளைகளின் பாரம் தாங்காமலேயே மரம் விழுவது வாடிக்கையாக உள்ளது. மழைக்காலங்களில் அடிக்கடி கிழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, குடியிருப்புகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்றுவது குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த மரங்களை அகற்றாமல் விட்டுவிட்டனர். இதனால், மழைக்காலங்களில் இந்த ராட்சத கற்பூர மரங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது. ஊட்டி அரசு மருத்துவமனை வளகத்திலும் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சில மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டன. எனினும், பல மாரங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்தால், மருத்துவமனை கட்டிடத்தின் மேல் விழும் அல்லது எதிரே உள்ள சாலையில் விழும். இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. இந்த மரங்களை அகற்றக் கோரியும், வேறு சோலை மரங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Ooty Government Hospital ,
× RELATED ஊட்டி அரசு மருத்துவமனை செல்லும் சாலை சீரமைப்பு