×

கோவையில் இன்று ரம்ஜான் நோன்பு துவக்கம்

கோவை, ஏப். 14: கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.ஐ.முகமதுஅலி வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் மாதம் 12-ம் தேதி (திங்கள்) மாலையுடன் ஷஅபான் பிறை 29 நிறைவுபெற்றதை தொடர்ந்து, அன்றையதினம் மாலை ரமலான் பிறை தென்படும் வாய்ப்பு இருந்ததால் அதனை காணவும்,  நகரில் காணமுடியாத சூழலில்,  மாவட்டத்தின் பிற பகுதிகளில் பிறை தென்பட்ட தகவல்கள் பற்றி ஆய்வு செய்திடவும், கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்  மற்றும் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ரமலான் பிறை கமிட்டி கூட்டம் கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் பவுசுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் வளாகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, ஜமாஅத்துல் உலமா தலைவர் முகமது ஹஜ்ரத் தலைமை தாங்கினார். மாவட்ட அனைத்து ஜமாத் தலைவர் எம்.ஏ.காதர், மாவட்ட அனைத்து ஜமாத்  பொதுச்செயலாளர் எம்.ஐ.முகமது அலி, மாவட்ட ஐக்கியஜமாத்  தலைவர் ஏ.ஆர்.பஷீர்அகமது, மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார், ஜமாஅத்துல் உலமா  செயலாளர் அப்துல் மஜீத் இம்தாதி  பவுசுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் முத்தவல்லி நாகூர் முகையதீன், தலைவர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்றையதினம் மாலை ரமலான் பிறை தென்படவில்லை. தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் ரமலான் பிறை தென்படவில்லை. எனவே, 13-ம் தேதி (செவ்வாய்)  இரவு முதல் தராவீஹ் தொழுகை ஆரம்பம் செய்வது என்றும், 14-ம் தேதி (இன்று) முதல் ரமலான் நோன்பு தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவலை தமிழக தலைமை ஹாஜி அவர்களும் உறுதிசெய்து அறிவித்துள்ளார். இவ்வாறு எம்.ஐ.முகமது அலி அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Coimbatore ,
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...