×

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோடு, ஏப்.14:  ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ் மாதம் சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை கனி விழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டிற்கு முந்தைய நாளில் மக்கள் தங்களது வீடுகளில் பழங்கள், பூக்கள், கண்ணாடி, ரூபாய் நோட்டுக்களை வைத்து, தமிழ் புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன் வீட்டில் வைத்த பழங்களை பார்த்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். தமிழ் புத்தாண்டு இன்று (14ம் தேதி) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ஈரோடு மாநகரில் பழக்கடைகளில் மூக்கனிகளான மா, பலா, வாழை, இதுதவிர ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை வியாபாரிகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

இதில், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் பழ கடைகளிலும், மாநகரில் சாலையோரம் இயங்கும் பழக்கடைகளிலும் பழங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், பழ விற்பனையும் அதிகரித்துள்ளது. இது குறித்து பழ வியாபாரி ஒருவர் கூறுகையில்,`சித்திரை கனியையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். கோடை காலம் என்பதால் தமிழகத்தில் எப்போதும் பழங்கள் விலை உயரும். அதன்படி, இந்த ஆண்டும் பழங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரோட்டில் நேற்று விற்பனையான பழங்களின் விலை (கிலோ): ஆப்பிள்- ரூ.190, திராட்சை- ரூ.90, சாத்துக்குடி- ரூ.80, ஆரஞ்சு- ரூ.120, சப்போட்டா- ரூ.50, மாம்பழம்- ரூ.90, கொய்யா- ரூ.60க்கு விற்பனையானது. எலுமிச்சை பழம் ஒன்று ரூ.3 முதல் ரூ.5வரை விற்பனை செய்யப்பட்டன.

Tags : Tamil New Year ,
× RELATED டியோ டியோ டோலு!