×

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் விசி கட்சி வலியுறுத்தல்

திருவாரூர், ஏப்.14: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து துவக்குமாறு வடக்கு மாவட்ட விசி கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவாரூர் கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விசி கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், குடந்தையிலிருந்து திருவாரூர் செல்லும் வழி, காட்டூரிலிருந்து தஞ்சை சாலையை இணைக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு அதனை காட்டூர், திருக்கண்ணமங்கை, அகர திருநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்கங்கள் செல்வதற்கு இந்த பாலம் முக்கிய வழியாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த பாலம் பழுது காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய பாலம் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. இதனிடையே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆற்றின் குறுக்கே தற்காலிக மூங்கில் நடைபாலம் ஒன்று அமைத்து தரப்பட்டது. அந்த பாலமும் ஆற்றுநீரில் அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில், புதிய பாலம் கட்டும் பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் 6 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் பலனில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் இப்பிரச்னையில் தலையிட்டு பாலம் கட்டும் பணிகளை போர்க்கால அடிப்படையில் துவங்கிட சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : VC ,Odambokki river bridge ,Thiruvarur Collector's Office ,
× RELATED மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 120 மனுக்கள் பெறப்பட்டன