×

முத்துப்பேட்டை மருதங்காவெளியில் பராமரிப்பின்றி கிடக்கும் மினி குடிநீர் தொட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை, ஏப்.14: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மருதங்காவெளி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் போதுமானதாக கிடைக்காததால் மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாசலில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 2007-08ம் ஆண்டு பேரூராட்சி பொது நிதியில் மோட்டார் அறையுடன் கூடிய மினி குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டது. இதனை தினமும் இயக்க பேரூராட்சி சார்பில் பணியாளரும் நியமிக்கப்பட்டார். இதனால் இந்த டேங்க் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்ததால் போரிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் வரத்து தடைபட்டது. பின்னர் பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அதன் அருகில் மீண்டும் ஒரு போர் அமைக்கப்பட்டு குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் இந்த மினி டேங்க்கை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் குடிநீர் டேங்க் வீணாகி வருவதுடன் நல்ல நிலையில் இருந்த மின் மோட்டார் மாயமாகி அதன் அறையும் சேதமாகிவிட்டது. படிப்படியாக டேங்க் அறையில் இருந்த ஒவ்வொரு பொருட்களும் மர்ம நபர்களால் திருடப்பட்டு மாயமானது. இப்படியே தொடர்ந்தால் இந்த பகுதியில் தண்ணீர் டேங்க் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் நிலையில் உள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இதன் மூலம் பயனடைந்த இப்பகுதி மக்கள் குடியிருக்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த குடிநீர் டேங்க்கை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் செந்தில்குமார் கூறுகையில், இந்த குடிநீர் டேங்க் இன்று இந்த நிலைக்கு மாறி கிடப்பதற்கான காரணம் பேரூராட்சி நிர்வாகம்தான். சிறு சிறு பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து பராமரிப்பு செய்து வந்திருந்தால் இன்றைக்கு இந்த குடிநீர் டேங்க் மக்கள் பயன்பாட்டிலிருந்து இருக்கும். தற்போது இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் இந்த மினி குடிநீர் டேங்க்கை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Muthupet Maruthangaveli ,
× RELATED 50 இயந்திரங்கள் மூலம் சம்பா அறுவடை பணி...