×

இ.பாஸ் சரிபார்ப்பும் தொடங்கியது தமிழக எல்லையில் காய்ச்சல் பரிசோதனை அதிகாரிகள் நடவடிக்கை

கூடலூர், ஏப்.14: தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று முதல் தமிழக எல்லை குமுளியில், இ.பாஸ் மற்றும் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தொற்று இரண்டாம் முறையாக அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு இ.பாஸ் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முக்கியம் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான குமுளியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கம்பம்மெட்டு பகுதியில் க.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உண்டா என பரிசோதனை செய்து வந்தனர். பின்னர் ஒருசில நாட்களில் இங்கு பணியாளர்கள் வருவதை குறைத்துக்கொண்டனர். இதனால் மருத்துவ முகாம் ஆட்கள் இன்றி கிடந்தது. மேலும் இ.பாஸ் சோதனையும் நடைபெறவில்லை.   

இது குறித்து நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முதல் குமுளி எல்லையில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வருவாய்துறையினர், போலீசார் இ.பாஸ் சரிபார்க்கும் வேலையையும் செய்து வருகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு தமிழக அரசு இ.பாஸ் கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் தமிழக பகுதியிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவிலுள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். இவர்கள் கேரளாவுக்குள் செல்ல இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் முலம் ஆறுமாத இ.பாஸ் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகம் சார்பில் ஆன்லைனில் ஒருநாள் பாஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. வார பாஸ், மாதபாஸ், ஆறுமாத பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள், நாள்தோறும் பாஸ் எடுக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். அதற்கேற்றார் போல் எல்லை பகுதியில் உள்ள சில போலீசாரும் தொழிலாளர்களிடம் தினமும் பாஸ் எடுக்க வேண்டும் என்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் குமுப்பத்தில் உள்ளனர். இப்பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...