சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளியில் நின்றால் நமது நிழல் தரையில் விழாது

காரைக்குடி, ஏப்.14: சிவகங்கை மாவட்டத்தில் நாளை நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும், பக்கத்தில் நிழலாக தெரியாது என அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நாளை நிழல் இல்லா நாள் குறித்து அறிவியல் ஆசிரியர் செந்தில் கூறுகையில், ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் இந்நிகழ்வால் நிழல் பக்கத்தில் தெரியாது. நமது காலடியில் கீழே தெரியும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம் 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை 14 நாட்கள் தெரியும்.

அடுத்து ஆக.18ம் தேதியில் இருந்து செப்.1ம் தேதி வரை 13 நாட்கள் பூஜ்ஜிய நிழல் தினம் தெரியும். மொத்தம் இந்த ஆண்டு மட்டும் 27 நாட்கள் பூஜ்ஜிய நிழல் தினம் நடக்கும். சிவகங்கை மாவட்டத்தில் நாளை பகல் 12 மணி 16 நிமிடங்களிலும், மதுரையில் 12.18 மணிக்கும், தேனியில் 12.20 மணிக்கும்,, 16ம் தேதி திண்டுக்கலில் 12.18 மணிக்கும், புதுக்கோட்டையில் 12.15மணிக்கு தெரியும்.

இதுபோல் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடும். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் 12 மணி 16 நிமிடங்களில் நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது’’ என்றார்.

Related Stories:

>