ராமேஸ்வரம் கோயிலில் மேற்கூரை அமைக்க குடை பிடித்தப்படி மனு

ராமேஸ்வரம், ஏப்.14:  ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த டிக்கெட் கவுன்டர் பகுதியில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தி குடை பிடித்து மனுக் கொடுக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கிழக்கு ரதவீதி கோயில் நுழைவு வாயில் வழியாகவே கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் சென்றனர். அக்னி தீர்த்த கடலில் குளிக்கும் பக்தர்கள் சன்னதி தெரு வழியாக கோயிலுக்குள் சென்று தீர்த்தமாடினர். சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடுவதற்கு செல்லும் வழி மாற்றியமைக்கப்பட்டு தற்போது வரை கோயில் வடக்கு கோபுரவாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று 22 தீர்த்தக்கிணறுகளில் நீராடி தெற்கு கோபுர வாயில் வழியாக வெளியேறுகின்றனர்.

வடக்கு கோபுர வாசலுக்கு தீர்த்த கவுன்டர்கள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் அக்னிதீர்த்த கடலில் குளித்து விட்டு வடக்குரத வீதிக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தடுப்புகளுக்குள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பலரும் வெயிலின் தாக்கத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூ. சார்பில் நேற்று தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்வேல் தலைமையில் கோயில் தேவஸ்தான அலுவலகத்திற்கு வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் குடை பிடித்தபடி சென்றனர். வடக்கு கோபுரம் தீர்த்த கவுன்டர் தடுப்பு பகுதியில் உடனடியாக மேற்கூரை அமைக்க வலியுறுத்தி கோயில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோயில் மேலாளர் சீனிவாசன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories:

>