×

கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றம் 21ம் தேதி நடக்க இருந்த தேரோட்டம் ரத்து

கும்பகோணம்,ஏப்.14: கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. வருகின்ற 21ம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் ராமபிரான் பட்டாபிஷேக மூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு ராமநவமி விழாவை எளிய முறையில் நடத்திட கோயில் நிர்வாகம் முன் வந்தது.

இதையடுத்து நேற்று காலை தங்க கொடி மரத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது உற்சவர் ராமபிரான், சீதை, லெட்சுமணன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய விழாவான வரும் 21ம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் கோயிலுக்குள் குறைவான பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags : Kumbakonam ,Ramaswamy ,Ramanavami festival ,
× RELATED கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்..!!