×

ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்


சோழவந்தான், ஏப். 14: சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதற்காக, பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமையில் மூன்று மாத  கொடியேற்றம் நடக்கும். இதன்படி நேற்று முன்தினம் இரவு உபயதாரர் ராசம்பலம் குடும்பத்தார் முன்னிலையில், கோவில் குருக்கள்  சண்முகவேல் தலைமையில், கோயில் முன்புள்ள பலி பீடத்தில் தர்ப்பைப்புல்  கொடியேற்றி, சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுவாக நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாகச் சென்று வைகையாற்றில்  கொடியேற்றத்திற்குரிய பொருள்களுக்கு சிறப்பு பூஜை செய்து, மீண்டும் ஊர்வலமாக வந்து கொடியேற்றுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால், கோயில் வளாகத்தை சுற்றி வந்து பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இதில்,  மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள், காவல் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதையடுத்து  பூக்குழி இறங்கும் பக்தர்கள் நேற்று முதல் விரதம் தொடங்கினர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி மற்றும் கோயில் பணியாளர்கள்  செய்திருந்தனர். கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 14ல்  இரண்டாவது கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாள் நடைபெறும். இதில் ஜூன்  22ல் பால்குடம், அக்கினி சட்டி, 23ல் பூக்குழி, 29ம்  தேதி தேரோட்டம், 30ல் வைகையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும்  நடைபெற உள்ளது.                    

Tags : Zenagai Mariamman Temple ,
× RELATED ஜெனகை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் விழா