×

மதுரையில் கொரோனா தடையை மீறி அரசு பொருட்காட்சி நடத்த ஏற்பாடு ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை, ஏப். 14: மதுரையில் கொரோனா தடையை மீறி, அரசு பொருட்காட்சி நடத்த ஏற்பாடு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தகவல் தொடர்புத்துறை சார்பில் தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கும். இதில், அரசு மற்றும் பொதுத்துறை சார்பில் அரங்கம் அமைத்து, தங்களது துறையின் திட்டப்பணிகளை பொதுமக்கள் அறிய காட்சிப்படுத்துவர். ராட்டினம் உள்ளிட்ட பொழுது போக்கு, கலைநிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்த கண்காட்சி, ஜூன் முதல்வாரம் வரை நடைபெறும். சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கண்காட்சிக்கு பார்வையாளர் அதிகமாக வருவார்கள். கடந்தாண்டு கொரோனாவால், சித்திரை திருவிழா மற்றும் அரசு பொருட்காட்சி நடைபெறவில்லை. ஆனால், இந்தாண்டு திருவிழாவும், பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், விழாக்களை ரத்து செய்துள்ளது. இதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு பொருட்காட்சி, புதூர் சிஎஸ்ஐ மைதானத்தில் நடைபெறும் என செய்தி மக்கள் தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கொரோனா 2வது அலை பரவலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அரசு பொருட்காட்சி நடந்தால், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காண திரள்வார்கள். இதனால், கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.  
 இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கனகவேல் பாண்டியன் கூறுகையில், ‘கொரோனா 2வது அலை தற்போது அதிகமாக பரவி வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு அறிவித்த தடையை மீறி, இதுபோன்ற கண்காட்சியை நடத்தினால், பொதுமக்கள் கண்டிப்பாக பார்வையிட கூடுவார்கள். இதன்மூலம் கொரோனா தொற்று மேலும் பரவும். பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னையில் யாரும் ஈடுபடக்கூடாது.  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, கண்காட்சி நடத்த அனுமதி வழங்க கூடாது’’ என்றார்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...