கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்தாகும் வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

புதுக்கோட்டை, ஏப்.14: உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட இதர பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 3466 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 626 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1721 மெட்ரிக் டன் 2949 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டுமென மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விபரங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதிக விலைக்கு உர விற்பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை செய்தல் போன்ற நிகழ்வு ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறுபவர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>